ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு
ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நேற்று அங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு முட்புதரில் குழந்தை ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சுகாதார ஆய்வாளர் ரத்தினக்குமார் மற்றும் செவிலியர் வந்து பார்த்த போது, சாக்கு பையினுள் துணியால் சுற்றப் பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருப்பது தெரிய வந்தது.

குழந்தையை மீட்ட ஊழியர்கள் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர் ஜெயலட்சுமி அந்த குழந்தையை பரிசோதித்தார். குழந்தை 1.5 கிலோ எடை இருப்பதும் தெரிய வந்தது.


இந்த தகவல் அறிந்ததும் அப் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தையை பார்க்க மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். குறை பிரசவத்தில் பிறந்துள்ளதால், அதன் தாய் பராமரிக்க இயலாத நிலையில் விட்டு சென்றிருக்கலாம் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு அங்குள்ள ஒரு பெண் தாய்ப்பால் கொடுத்தார். முதலுதவிக்கு பின் மருத்துவர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அந்த குழந்தை பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com