கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்ட வேண்டும்

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் பேசினார்.
கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்ட வேண்டும்
Published on

கோவை,

காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வினோத் சின்னராஜ், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் எஸ்.பவன்குமார் கலந்து கொண்டு அந்த கட்சியை சேர்ந்த விவசாயிகளுக்கு மக்காச்சோளம், சோளம், கம்பு உள்பட பல்வேறு பயிர்களின் விதைகள் மற்றும் இடுபொருட்களை வழங்கி பேசினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பின்னர் நீர்ப்பாசனத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை. அணைகளும் கட்டப்பட வில்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளம் வீணாக கடலில் சென்று கலக்குகிறது. அதை சேமிக்கும் வகையில் புதிதாக அணைகள் கட்ட வேண்டும். அப்படி செய்தால் நாம் அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காக கெஞ்ச வேண்டியது இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகள், அணைகள் ஆகிய வற்றை தூர்வார வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை கட்ட முடி யாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். சிலர் தற்கொலையும் செய்து உள்ளனர். எனவே விவசாயிகளின் கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் கடத்தி வரும் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது. நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை தூர்வார தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் மகேஸ்குமார், மாநில செயலாளர் வீனஸ்மணி, மாநில பொதுச்செயலாளர் மக்கள்ராஜன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசந்தர், பாராளுமன்ற இளைஞர் காங்கி ரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் சுடர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிலைய செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com