

சென்னை,
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன்படி, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 69-ல் உள்ள திரு.வி.க.நகர் மண்டலம் 6-ல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தி.மு.க. சார்பில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க. சார்பில், ஊரடங்கு காரணமாக தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் சானிடைசர், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் தடுப்பூசி போடும் முகாமையும் அவர் பார்வையிட்டார். கோவிட் மருத்துவ சிறப்பு அவசர வாகனங்களையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் ராஜா கார்டன் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து, சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன் மற்றும் டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஐ.பரந்தாமன், தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.