முதல்-அமைச்சர் விழாவில் தீக்குளிக்க முயன்ற மாமியார்-மருமகள் கைது

சிவகாசியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் தீக்குளிக்க முயன்ற மாமியாரும் மருமகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் வக்கீல் குமாஸ்தா ஒருவரும் கைதானார்.
முதல்-அமைச்சர் விழாவில் தீக்குளிக்க முயன்ற மாமியார்-மருமகள் கைது
Published on

திருத்தங்கல்,

சிவகாசியில் அரசு சார்பில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கடந்த 23- ந் தேதி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழா முடிவடையும் நிலையில் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்த இரு பெண்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றினர். தீக்குளிக்க முயற்சித்த இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இருவருக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜ பாளையம் நரிமேடு இந்திரா காலனியை சேர்ந்த முனியசாமியின் மனைவி கனகலட்சுமி(வயது20), தாயார் பார்வதி(50) என்பது தெரியவந்தது. திருட்டு வழக்கில் முனியசாமியிடம் விசாரணைநடத்த அடிக்கடி போலீசார் வீட்டுக்கு வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்கள்.

இருவரிடமும் திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து இருவர் மீதும் தற்கொலை முயற்சி, பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது, போலீசாரின் பாதுகாப்பு பணிக்கு இடையூறு செய்தது போன்ற சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். மேலும் இதற்கு தூண்டியதாக ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி(52) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக உள்ளார்.

கைது செய்யப்பட்ட கனகலட்சுமி திருச்சி ஜெயிலிலும் பார்வதி மதுரை ஜெயிலிலும் ரங்கசாமி விருதுநகர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com