

மும்பை,
மும்பையில் கூட்டமாக சேர்ந்தும், விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியும் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள்
நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அமலில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்று பரவல் புதிய அவதாரம் எடுத்து உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.
பல நாடுகளில் வேகமாக பரவிய இந்த ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவுவதை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி இந்தியாவில் ஒமைக்ரான் பரவி வருகிறது. கொரோனாவை போல இந்த நோய் தொற்றிலும் மராட்டிய மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது.
இரவு ஊரடங்கு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
எனவே மராட்டிய அரசு நேற்று முன்தினம் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் இரவு ஊரடங்கும் விதித்தது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் பொதுவெளியில் 5 பேருக்கு கூட தடை விதிக்கப்பட்டது.
மேலும் துபாயில் இருந்து வரும் மும்பை வாசிகள் தங்களை 7 நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கொண்டாட்டங்களுக்கு தடை
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் வெளியிட்டு உள்ளார்.
இதன்படி மும்பை மாநகராட்சி சரகத்திற்கு உள்பட்ட மூடிய மற்றும் திறந்தவெளி பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட கூட்டம் கூடவோ அல்லது விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்கோ அனுமதி இல்லை.
இந்த உத்தரவு டிசம்பர் 25-ந் தேதி(நேற்று) இரவு முதல் அமலுக்கு வந்தது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.
இந்த உத்தரவு அனைத்து ஓட்டல்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் இதுபோன்ற கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடிய தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது.