நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை
நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை
Published on

அரூர், டிச.10-

அரூர் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடைய மகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நில தகராறு

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (வயது70) விவசாயி. இவருக்கு முருகேசன் (50) என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கோபாலுக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

இவருடைய 3 மகள்களில் ஒருவர் தந்தை பெயரில் உள்ள நிலத்தில் தனக்கும் ஒரு பகுதியை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இவ்வாறு நிலத்தில் பங்கு வழங்க கோபாலின் மகன் முருகேசன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இதுகுறித்து கோபால் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். 2 பேரையும் அழைத்து விசாரித்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தந்தை - மகன் இடையே நிலம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த முருகேசன் அருகே கிடந்த இரும்புக் கம்பியால் தந்தை கோபாலின் தலையில் அடித்துள்ளார். இதில் காயமடைந்து கீழே விழுந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் முருகேசன் அங்கிருந்து ஓடி விட்டார்.

இது பற்றிய தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கொலை வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகேசனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com