சேலம் அருகே திருவிழா நடத்துவதில் கருத்து வேறுபாடு: மாரியம்மன் கோவிலை பூட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் கம்பம் நடுவதை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சேலம் அருகே திருவிழா நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பொதுமக்களில் ஒருதரப்பினர் கம்பம் நடுவதை தடுத்து நிறுத்தி, மாரியம்மன் கோவிலை பூட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அருகே திருவிழா நடத்துவதில் கருத்து வேறுபாடு: மாரியம்மன் கோவிலை பூட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் கம்பம் நடுவதை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
Published on

கொண்டலாம்பட்டி,

சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் தலா 6 பேரை தேர்வு செய்து நிர்வாகத்துடன் புதிய கமிட்டி அமைத்து திருவிழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதன்படி இந்த ஆண்டு புதிய கமிட்டி அமைக்கப்படாமல் திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவிழாவுக்கு கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் கம்பம் நடுவதை தடுத்து நிறுத்தினார்கள். மேலும், கோவிலுக்குள் சென்று பூட்டிக்கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி அன்பழகன், மாணிக்கம், சக்தி ஆகியோர் கூறுகையில், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி புதிய கமிட்டி அமைக்கும் வரை திருவிழாவை நடத்தவிடமாட்டோம். அதற்கு அடையாளமாகத்தான் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.

இதுகுறித்து மற்றொரு தரப்பை சேர்ந்த ஊர்கவுண்டர் தனபால் கூறும்போது, நானும், அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கவேல் மற்றும் சிலரும் சேர்ந்து சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அந்த வழக்கில் வருகிற 24ந் தேதி தீர்ப்பு வர உள்ளது. அந்த தீர்ப்பில் வரும் தீர்வை வைத்து திருவிழா வழக்கம்போல் நடைபெறும். அதற்குள் என்னை காரணம் காட்டி திருவிழாவை நடத்தவிடாமல் தடுக்கின்றனர் என்றார்.

இதற்கிடையே, உள்ளிருப்பு போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளிருப்பு போராட்டம் இரவு வரை நீடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com