துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் நினைவு தினம்: தூத்துக்குடியில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் நினைவு தினத்தையொட்டி நேற்று ஏராளமானோர் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் முடிந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய அ.குமரெட்டியபுரம் பகுதியில் நேற்று காலையில் கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இதேபோல் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் சகாயமாதா ஆலயத்தில், துப்பாக்கி சூட்டில் பலியான சுனோலினுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார். இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சுனோலின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, சுனோலின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்கியது.

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை அடக்கம் செய்து உள்ள கல்லறைகளுக்கு பலர் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 30 இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். வெளியூர் ஆட்கள் தூத்துக்குடிக்குள் வருவதை தடுப்பதற்காக முக்கிய சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையும் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலவர தடுப்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com