தஞ்சாவூர்,
காவிரிடெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். அதுபோக கோடை நெல் சாகுபடியும் செய்யப்படும். தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அறுவடை முடிந்த இடங்களில் கோடை நெல், எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு முன்பாக தாழ்வான வயல்பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயிகள் பலர் கோடை நெல் சாகுபடி செய்வார்கள். அதன்படி சம்பா, தாளடி அறுவடை முடிந்த வயல்களில் கோடை நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் எக்டேரில் கோடை நெல் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1,341 டன்
நெற்பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் கொண்டு வரப்படும். அதன்படி சென்னை மணலியில் இருந்து சரக்குரெயிலின் 23 வேகன்களில் 1,341 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த உரமூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.