இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்ததாக வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது

திருமுருகன்பூண்டி அருகே இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்ததாக கூறி 2 வாலிபர்களை சரமாரியாக தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்ததாக வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது
Published on

அனுப்பர்பாளையம்,

தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தை அடுத்த குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாரத் (வயது 25) மற்றும் சக்திவேல் (20). இவர்கள் இருவரும் திருப்பூர் பி.என்.ரோடு வாவிபாளையத்தை அடுத்த வாரணாசிபாளையம் பகுதியில் தங்கி எலக்ட்ரிக் வேலை செய்து வருகின்றனர். கடந்த 12-ந்தேதி திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பாரத், சக்திவேல் ஆகியோர் எலக்ட்ரிக் வேலை பார்த்துள்ளனர்.

மதிய உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறி அதே பகுதியை சேர்ந்த கனகராஜ், ரவிக்குமார் ஆகியோர் சேர்ந்து பாரத் மற்றும் சக்திவேலை இரும்பு கம்பியால் சரமாரி தாக்கி உள்ளனர். மேலும் இருவருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரும் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபர்களை தாக்கிய கனகராஜ், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளம்பெண் சார்பில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் தான் வீட்டு குளியலறையில் குளித்து கொண்டிருந்ததை பாரத், சக்திவேல் ஆகியோர் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் பாரத், சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com