ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் கடைகளில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் ஜானகிராமன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் கள்ளிக்குடி பொன்னகரை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வேலை பார்த்தது தெரிந்தது.
அந்த சிறுவனை மீட்டு விசாரித்தபோது 9-வது படித்ததோடு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு வந்ததாக தெரிவித்தான். அதேபகுதியில் மற்றொரு ஜவுளிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் நரிக்குடி கட்டாங்குளம் பகுதியை சேர்ந்த 16-வயது சிறுவன் வேலை பார்த்தது தெரிந்தது. அந்த சிறுவனிடம் விசாரித்தபோது 9-வது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டதாக தெரிவித்தான். 2 சிறுவர்களையும் அதிகாரிகள் மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
அதன் தலைவர் துரைராஜ், குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பொன்னகரை பகுதியை சேர்ந்த சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்த்து 10-ம் வகுப்பு படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கட்டாங்குளம் பகுதியை சேர்ந்த சிறுவனை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேற்கண்ட 2 பேரையும் குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு வைத்திருந்த கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.