மால்வாணியில் சிறுவர்களை கடத்த முயன்ற 2 பெண்கள் கைது

மால்வாணியில் சிறுவர்களை கடத்த முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Published on

மும்பை,

மும்பை மலாடு மால்வாணி பகுதியில் உள்ள ஹாத்தி பூங்காவில் சம்பவத்தன்று சிறுவர், சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் விளையாடி கொண்டிருந்த 9 மற்றும் 11 வயது சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். மேலும் தங்களுடன் கடைக்கு வந்தால் சாக்லெட் மற்றும் செலவுக்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய சிறுவர்கள் இருவரும் அவர்களுடன் சென்றனர்.

அப்போது, அந்த சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்த மற்ற சிறுவர்களுக்கு அவர்களின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த சலீம் சேக் என்பவரிடம் இதுபற்றி தெரிவித்தனர்.

இதனால் உஷாரான சலீம்சேக் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதனைக்கண்ட ஆண் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். பெண்கள் 2 பேரும் பிடிபட்டனர். இதையடுத்து 2 பேரையும் அவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் லஷ்மி கன்னா (வயது26), ஸ்ரீதேவி(30) என்பதும், தப்பிஓடியவர் சரத் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சிறுவர்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com