2 வாலிபர்களுக்கு நூதன தண்டனை கடற்கரையை சுத்தம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஓட்டல் உரிமையாளரை மிரட்டியவழக்கில் சிக்கிய 2 வாலிபர்களை கடற்கரையை சுத்தம் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Published on

மும்பை,

பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி அன்று ஓட்டலை அடைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அனுகர் சிங்(வயது22) மற்றும் குன்வார் சிங்(25) ஆகியோர் போலி துப்பாக்கியை காட்டி ஓட்டலை திறந்து தங்களுக்கு உணவு அளிக்குமாறு உரிமையாளரை மிரட்டினர்.

இதனால் பயந்துபோன ஓட்டல் உரிமையாளரும் அவர்கள் கூறியபடி செய்தார். வாலிபர்கள் அங்கிருந்துசென்றதும் சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் வாலிபர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் பார்தி தாங்ரே அடங்கிய ஐகோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாலிபர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், புகார் தாரருடன் வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ள வாலிபர்கள் இருவரும் விரும்புவதாகவும், அவர்கள் மீதான வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இதற்காக அவர்கள் இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு தெரிவிக்கையில், நாங்கள் வெறும் இழப்பீடு மட்டும் விதித்தால், வாலிபர்களின் பெற்றோர் அதை செலுத்திவிடுவர். இது எந்த விதத்திலும் பயன் அளிக்க போவதில்லை. நாங்கள் குற்றவாளிகள் தனிப்பட்ட முறையில் நாட்டிற்கு எதையாவது செய்யவேண்டும் என்று கருதுகிறோம்.

வாலிபர்கள் இருவரையும் சமூக சேவையில் ஈடுபடுத்த விரும்புகிறோம்.
அவர்கள் வழக்கறிஞர் அப்ராஸ் ஷா தலைமையிலான வெர்சோவா கடற்கரை தூய்மை பணியில் தன்னார்வளர்களாக இணைந்து ஒரு மாதத்திற்கு, வார இறுதி நாளில் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபடவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com