

பெரம்பலூர்,
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் 19 வழக்குகளும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 வழக்குகளும் என மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தி.மு.க.வினர் மீது 12 வழக்குகளும், அ.தி.மு.க.வினர் மீது 2 வழக்குகளும், இதர கட்சியினர் மீது 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் வாகனங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தல், கொடி, பேனர் அமைத்தல், வாகனங்களில் கொடி கட்டுதல், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.