பாளேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பாளேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

கிருஷ்ணகிரி,

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, துணை செயலாளர் ஜெயராமன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாளேகுளி ஏரி முதல் வேலம்பட்டி, வீரமலை வழியாக சந்தூர் வரை 28 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் கிருஷ்ணகிரி அணையின் உபரிநீர் ஏரிகளுக்கு சென்று அடைகிறது. தற்போது கடும் வறட்சியால் ஏரிகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. அத்துடன் கால்வாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பல இடங்களில் கால்வாயில் மண் சரிந்துள்ளது.

எனவே, கால்வாயை தூர்வாரி, கால்வாய் மற்றும் ஏரியில் உள்ள முட்புதர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கால்வாய் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கும், அகற்றப்பட்ட மரங்களுக்கும் உண்டான இழப்பீடு வழங்க கோரி பல முறை மனு அளித்தும், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே, உரிய பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல் சூளகிரி வட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து மருதாண்டப்பள்ளி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரி நிரம்பி, துரை ஏரிக்கு தண்ணீர் விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com