தமிழகத்தை தாக்க திட்டம்: 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் கைது பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தை தாக்க திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
Published on

சென்னை,

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சையது அகமது, அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகிய 3 பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

அவர்கள் மூவரும் தலைமறைவாக இருந்து கொண்டு பயங்கரவாதிகள் துணையோடு, தமிழகத்தில் பெரிய தாக்குதலை நடத்தலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டனர். எனவே அவர்கள் மூவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். அவர்களை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கடந்த வாரம் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள அந்த 3 பேருக்கும் உதவி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில் வைத்து, முகமது அனீப்கான் (வயது 29), இம்ரான்கான் (32), முகமது சயீத் (24) ஆகிய மேலும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும், தலைமறைவு குற்றவாளிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் செல்போன் சிம்கார்டுகள் வாங்கி சப்ளை செய்துள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரிடமும் இவர்கள் செல்போனில் பேசி தொடர்பில் இருந்துள்ளனர். தலைமறைவு குற்றவாளிகள் வங்காளதேச நாட்டுக்கு தப்பி செல்ல உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பேரில் கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 3 துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேருடனும் சேர்ந்து தமிழகத்தில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சட்டவிரோத நடவடிக்கை உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com