திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம், தி.மு.க. மனு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. மனு அளித்து இருக்கிறது.
Published on

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாஷா, சுனில் சந்திரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோருக்கு தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மூத்த வக்கீல்கள் பி.வில்சன், ஆர்.கிரிராஜன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஒரு பெரிய கட்சியாக இருக்கிறது. பல்வேறு முறை ஆட்சி அமைத்து இருக்கிறது. இதுபோல் பல்வேறு மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்து இருக்கிறது. 1957-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் துணை போகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவே தெரிகிறது. மைனாரிட்டி அ.தி.மு.க. சட்டசபை இடைத்தேர்தல் நடத்தாததால் பிழைத்து கொண்டு இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இடைத்தேர்தலை நடத்தாமல் தள்ளிவைத்து கொண்டே இருக்கிறது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கின்றன. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு சட்டப்பூர்வமான எந்தவித தடைகளும் இல்லை. ஆனாலும் தேர்தல் ஆணையம் சட்டத்துக்குட்பட்டு அந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தவில்லை.

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த கனகராஜ் மரணம் அடைந்ததால் அதுவும் காலியாக இருக்கிறது. எனவே ஏற்கனவே அறிவித்துள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

இதுதொடர்பான அறிவிப்பை 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடவில்லை என்றால் ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தை மீறியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குஜராத் மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் மாறி இருக்கின்றனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு வருகிற 16-ந்தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்த காட்டிய அவசரத்தை தமிழகத்தில் செயல்படுத்தாதது ஏன்?. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வெளியே வந்த ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் கோர்ட்டில், சரியான நேரத்துக்குள் தேர்தலை நடத்துவதாக கூறி இருந்தனர். ஒரு தேர்தலை நடத்துவதற்கு 24 நாள் கால அவகாசம் இருந்தால் போதும்.

அந்தவகையில் மே மாதம் 19-ந்தேதி வரை 45 நாள் கால அவகாசம் இருக்கிறது. எனவே 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதையும் மனுவில் வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com