மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர 4 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Published on

சேலம்,

சேலம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், சேர விருப்பம் உள்ளவர்கள் சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 18-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை 3 நாட்களில் சுமார் 4 ஆயிரம் பேர் ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.

ஊர்க்காவல் படையில் சேருவதற்கு கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் 170 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும். மனுதாரர் எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது. தேர்வின்போது 20 வயது முடிந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஊர்க்காவல் படையில் சேருவதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

4 ஆயிரம் பேர் விண்ணப்பம்

இந்தநிலையில், ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து பெறப்பட்ட 4 ஆயிரம் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஊர்க்காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை மட்டும் அழைத்து அவர்களுக்கு விரைவில் உடற்தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் பெரியசாமி கூறுகையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது கூடுதலாக ஆட்கள் தேவைப்படுவதால் புதிதாக ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். போலீஸ் தேர்வு மாதிரி ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். தகுதியுள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com