

நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகக்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 13 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 399 மனுக்கள் என மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
இதை தொடர்ந்து சத்துணவுத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையும், கரியாப்பட்டினம் சரகம் பிராந்தியங்கரை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நவீன மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி வழங்கினார். இதில் தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.