

பெங்களூரு,
சமூக நலத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சமூக நலத்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
சமூக நலத்துறையின் கீழ் நிறைய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் விடுதிகளின் தேவை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உண்டு உறைவிட பள்ளிகளில் புதிதாக 660 ஆசிரியர்கள் மற்றும் 183 பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.5,000 உதவித்தொகை
கல்வித்துறையின் உதவியுடன் இந்த நியமன பணிகளை மிக விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறையின் கால அட்டவணைப்படி சமூக நலத்துறை பள்ளிகள் செயல்பட தொடங்க வேண்டும். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
ஐராவத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கு கார் வழங்கப்பட்டு அதை வாடகைக்கு ஓட்டி வாழ்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமப்புறங்களில் சரக்கு வாகனங்களை வழங்குமாறு கேட்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 11 ஆயிரம் சரும தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் தலா ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
குடிநீர் மையங்கள்
இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது, சமூக நலத்துறை பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்களில் 49 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் 8,911 குடிநீர் மையங்களுக்கு மின் இணைப்பு வசதி வழங்க வேண்டும். கடந்த 2019-20-ம் ஆண்டில் 8,270 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. 10 ஆயிரத்து 201 ஆழ்துளை கிணறு மோட்டார்களுக்கு இலவச மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்றார்.