தமிழ்நாடு பாடத்திட்டத்தில் மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்த 69 மாணவர்கள் தேர்ச்சி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மராட்டியத்தில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
Published on

சென்னை,

மராட்டிய மாநிலம், மும்பைவாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மும்பையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மும்பையில் உள்ள பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூர் மற்றும் ஸ்டார் ஆங்கிலப்பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகளை நடத்தி வருகின்றது.

மும்பையில் தமிழ் வழியில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் இத்தேர்வு மையங்களில் 2019-20-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பள்ளி மாணவர்களை காத்திடும் பொருட்டு, தமிழ்நாட்டில் நடக்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கடந்த ஜூன் 9-ந் தேதியன்று உத்தரவிட்டிருந்தேன்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கான மதிப்பெண்கள், ஜூன் 9-ந் தேதியன்று அறிவிக்கப்பட்ட நடைமுறையின்படி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com