தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று தீவிர கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை,

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அதன்தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com