மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது

மதுரையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.
Published on

மதுரை,

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் காசி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 23). கடந்த 30-ந் தேதி இவர் வீட்டில் இருந்தபோது தலைவலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.

கார்த்திகாவின் நிலையை அவரது கணவரிடம் மருத்துவ குழுவினர் எடுத்துக்கூறி, உயிருக்கு போராடும் மற்ற நோயாளிகளுக்கு மற்ற உறுப்புகளை பொருத்தி மறு வாழ்வு கொடுக்கலாம் என்றனர். அவரது கணவரும், இதற்கு ஒப்புக்கொண்டார். அரசிடமும் அனுமதி கோரப்பட்டு துரிதமான நேரத்தில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.

7 பேருக்கு மறுவாழ்வு

அதன்பின்னர், மருத்துவ குழுவினர் தலைமையில் சுமார் 5 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் மூலம், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், இருதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சரியான நேரத்தில் இருதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதுபோல், கண்கள் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுக்கப்பட்டது. அதன்மூலம் மூளைச்சாவு அடைந்த கார்த்திகாவின் உடல்உறுப்புகள், 7 பேருக்கு அளிக்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com