700 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த கனகமுட்லு அருகே உள்ள கணவாய்பட்டி மலையின் வடகிழக்கு பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 7 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இது குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

முதல் நடுகல்லில் ஒரு பெண்ணும், அவள் குழந்தையும் காணப்படுகின்றனர். அதன் அருகே புலி ஒன்றும் காணப்படுகிறது. நடுகல்லில் ஒரு பெண்ணும், அவள் குழந்தையும் அந்த புலியால் கொல்லப்பட்டதின் நினைவாக அந்த நடுகல் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நடுகல் ஒரு வீரன் இடது கையில் கதிர் அறுக்கும் அரிவாளும், ஒரு கையில் வில்லும் வைத்துள்ளான். ஆபரணங்கள் அணிந்துள்ளான். இவர் தான் ஊரை காக்கும் பணியில் இறந்து இருக்கலாம் என அறிய முடிகிறது. 3-வது நடுகல் இடது கையில் வில்லும், முதுகில் அம்புமாகவும், வலது கையில் வாளும் வைத்துள்ளான். ஆபரணங்கள் அணிந்துள்ளான். இவன் போரில் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்டு இருக்கிறது.

4-வது நடுகல்லில் இடது கையில் வில்லும், முதுகில் அம்பும், வலது கையில் வாளும் வைத்துள்ளான். இடையில் ஒரு குறுவாளும் உள்ளது. ஆபரணங்கள் அதிகமாக அணிந்துள்ளான். படைத்தலைவன் போன்ற தோற்றத்துடன் உள்ளது. இவர் போரில் இறந்ததின் நினைவாக வைக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல 5, 6, 7-வது நடுகற்களில் வீரன் வாளுடன் இருப்பது போலவும், உடன்கட்டை ஏறுதலை குறிக்கும் வகையிலும் இருப்பதை காண முடிகிறது. இவை 16 அல்லது 17-ம் நூற்றாண்டுகளில் குறுகிய கால இடைவெளிகளில் வைக்கப்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கள ஆய்வில் ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், மதிவாணன், காவேரி, விஜயகுமார், பிரகாஷ், ரவி, விமலநாதன், வாசுகி, நாராயணமூர்த்தி, முருகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com