தேவகோட்டை அருகே, ஏ.டி.எம்.க்கு பணம் கொண்டுசென்ற கார் விபத்தில் சிக்கி 5 பேர் காயம் - சிதறிய ரூ.1 கோடியை எடுத்து ஒப்படைத்த கிராம மக்கள்

தேவகோட்டை அருகே ஏ.டி.எம்.மில் பணம் வைக்க கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காரில் சிதறிய ரூ.1 கோடியே 10 லட்சத்தை விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த கிராம மக்கள் எடுத்து பாதுகாத்து ஒப்படைத்தனர்.
Published on

தேவகோட்டை,

சிவகங்கையில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.ல் பணம் வைப்பதற்காக ரூ.1 கோடியே 10 லட்சத்தை ஒரு வாடகை காரில் எடுத்துக்கொண்டு தேவகோட்டை நோக்கி வந்தனர். அந்த காரை சிவகங்கை அருகே உள்ள காடத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் கண்ணன் (வயது29) ஓட்டி வந்தார்.

அந்த காரில் அந்த வங்கியை சேர்ந்த சந்தோஷ் (20), குணசேகரன்(52), சிவக்குமார்(26) தினேஷ் பாபு ஆகியோர் உடன் வந்தனர். அந்த கார் தேவகோட்டையை அடுத்த பாவனகோட்டை அருகே திருமணவயல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அந்த பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தினால் காரில் இருந்த பணப்பெட்டி உடைந்து ரூ.1 கோடியே 10 லட்சம் காருக்குள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. கிராம மக்கள் அதனை சேகரித்து படுகாயமடைந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்ற வங்கி ஊழியர்களுடன் பெட்டியில் வைத்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு போலீசாரிடம் அந்த பணத்தை ஒப்படைக்கும் வரை மருத்துவமனையில் காத்திருந்தனர். வேலாயுதபட்டினம் போலீசார் அங்கு வந்தவுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கு வந்த வங்கி அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த கார் டிரைவர் கண்ணன் மற்றும் வங்கி ஊழியர் குணசேகரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com