90 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி 10 நிமிடத்தில் கடந்து 3 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்

90 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து சென்று 3 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Published on

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 27). இவர் கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (3).இந்த சிறுவனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் இருந்தது. இதனால் சந்தோசை வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் அன்று மாலை திடீர் என்று அந்த சிறுவனுக்கு வலிப்பு வந்தது. இதனால் சிறுவனை கோவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடனடியாக உயர் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கோவைக்கு சிறுவனை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வெள்ளகோவிலில் மின்னல் என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு ஆம்புலன்சில் சிறுவன் சந்தோசை கோவைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாஷ் (21) வெள்ளகோவில் மருத்துவமனையில் இருந்து இரவு 7 மணி அளவில் சிறுவன் சந்தோசை ஏற்றிக்கொண்டு கோவைக்கு மின்னல் வேகத்தில் புறப்பட்டார். சரியாக 1 மணி நேரம் 10 நிமிடத்தில் அதாவது இரவு 8.10-மணிக்கு அந்த ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவன் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்.

உரிய நேரத்தில் சிறுவன் உயிரை காப்பாற்ற உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாசை சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாஷ் கூறியதாவது:-

வெள்ளகோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல் நிலை மோசமானதால் அவனை கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்ல என்னை அழைத்தனர். நிலைமையை நன்கு உணர்ந்த நான் அன்று இரவு 7 மணிக்கு வெள்ளகோவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டேன்.

சரியாக ஒரு மணி நேரம் 10 நிமிடத்தில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். பின்னர் நானே அந்த சிறுவனை தூக்கிச்சென்று சேர்த்தேன். வெள்ளகோவிலில் இருந்து கோவை 90 கி.மீ தூரம் ஆகும். பஸ்சில் பயணம் செய்தால் 2 மணி நேரம் 30 நிமிடம் ஆகும். தனியார் காரில் சென்றால் 2 மணி நேரம் ஆகும்.

நான் ஆம்புலன்சின் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்தபடி சைரன் போட்டுக்கொண்டு சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் சென்றேன். இரவு நேரம் என்பதால் போக்குவரத்து அதிகளவில்இருந்தது. இ்ருப்பினும் விரைந்து சென்று அவனை காப்பாற்ற உதவினேன்.

இவ்வாறு டிரைவர் ஆகாஷ் கூறினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற 90 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாஷ் செயல் தற்போது வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் சமூக வலைதளங்களில் பெரிதும் பரவி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com