இதற்காக திண்டுநிகாத் என்பவருடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தைரியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பை தொடங்கி இருக்கிறார். குறைந்த வருவாய் பெறும் பெண்களைக் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றுவதே தங்கள் நோக்கம் என்கிறார். பெண்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் சொல்கிறார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கும் இந்த அமைப்பு பெண்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கிறது. அதில் சேர்ந்து ஆட்டோ ஓட்டும் பயிற்சி பெற்ற முதல் பெண்மணி அனிதா. 40 வயதாகும் இவர் உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே குடிசை பகுதியில் வசிக்கிறார். துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு பிரசன்னாவும், நிகாத்தும் என்.ஜி.ஓ. மூலம் அனிதாவைச் சந்தித்தனர். துப்புரவு பணி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அவரால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறிந்தார்கள்.
இதையடுத்து அனிதாவுக்கு முதன் முதலில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதற்கான பயிற்சி அளித்தனர். அவர் சிறப்பாக ஆட்டோ ஓட்டக்கற்றுக்கொண்டதோடு முதல் முயற்சியிலேயே ஓட்டுநர் உரிமமும் பெற்றுவிட்டார். ஆட்டோ மட்டுமின்றி இருசக்கர வாகனம், கார் ஓட்டுவதற்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். ஏராளமான பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற்று அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள். டெலிவரி ஏஜெண்டுகளாகவும், ஸ்கூட்டர், டாக்சி மற்றும் கார் ஓட்டுநர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓட்டுநர் பயிற்சி முடித்ததும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், புதிய நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் வறுமை பின்னணியிலேயே வாழ்கிறார்கள். வாழ்க்கையை ஓட்டுவதற்கு தற்காலிகத் தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு நிலையான வருவாய் இருப்பதில்லை. இவர்களைப் போன்றோருக்கு மாநில அரசுகள் மூலம் வங்கிக் கடனும் கிடைப்பதில்லை.
அதனால் கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு குறைந்த வருவாயிலேயே வாழ வேண்டியுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததும், நிலையான வேலைவாய்ப்பை பெற முடியாமல் போவதும் நிதி பிரச்சினையில் இருந்து மீளவிடாமல் செய்துவிடுகிறது.
தற்போது, நிதி திரட்டி, 4 பெண்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்திருக்கிறோம். ஓட்டுநர் பயிற்சி முடித்திருப்பதால், நிதிப் பிரச்சினையிலிருந்து மீண்டு வருகிறார்கள். அதோடு அவர்களது குழந் தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கவும் முடியும். சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டும்போது, அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு, அவர்களது வாழ்வாதாரம் உயரும் என்றார் பிரசன்னா டொம்மு.
பயிற்சியின்போது டிஜிட்டல் கல்வி, மொழி மற்றும் தொடர்புகொள்ளும் திறன், அடிப்படையான பாதுகாப்பு நுட்பங்கள், வாகனங்களைப் பராமரிக்கும் திறன் குறித்த பயிற்சியும் 7 வாரங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.