

அரியலூர்,
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இதனால் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். நேற்று ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை என்பதால் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் பூக்கார தெரு மாரியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தி கொண்டும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
இதேபோல பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு காலை முதலே பக்தர்களின் கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
இதில் பெரம்பலூர், அரியலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் ஜெயங்கொண்டம் காவிரி கரையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்து திருச்சி ரோடு, கடைவீதி, நான்கு ரோடு, தா.பழூர் ரோடு வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.பின்னர், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு திரவிய பொடி, மாவுபொடி, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல அரியலூர்-பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.