மிக்-21 பழைய தகவல் தொடர்பு சாதனத்தாலேயே அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கி கொண்டார்

மிக்-21 விமானத்தில் உள்ள பழைய தகவல் தொடர்பு சாதனமே அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கக் காரணம் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
Published on

புதுடெல்லி

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்த, விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிருஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். இதனால் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார். அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுவித்தது.

இந்தச் சம்பவங்கள் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது.

மிக்-21 விமானத்தில் உள்ள பழைய தகவல் தொடர்பு சாதனமே அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், ``இந்திய விமானத்தில் குறைபாடுகள் இல்லையென்றால் நம் அபினந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி இருக்க மாட்டார். பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தைத் தாக்கி வீழ்த்தும்போது அபிநந்தனின் விமானத்திலிருந்த தகவல் தொடர்புச் சாதனம் பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை வீழ்த்திய பிறகு, மீண்டும் இந்தியா திரும்புவது போன்ற எந்தக் கட்டளைகளும் இந்தியத் தரப்பிலிருந்து அவருக்குத் தரப்படவில்லை. அதனால் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும்போது, அவர்களிடம் சிக்கியுள்ளார். அபிநந்தன் இருந்த மிக்-21 விமானத்தில் ஆன்டி ஜாமிங் (anti-jamming) இருந்திருந்தால் இந்திய அதிகாரிகளின் கட்டளைப்படி விமானத்தை வீழ்த்திய பிறகு, இந்தியா திரும்பியிருப்பார். பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்காமல் தப்பியிருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்க இந்திய விமானப்படையின் சில விமானங்கள் சென்றன. ஒருகட்டத்தில் அனைத்து விமானங்களும் மீண்டும் இந்தியா திரும்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல் அபிநந்தனை அடையாததால் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் விமானத்தை விரட்டியடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மேம்படுத்தப்பட்ட சாதனங்களின் குறைபாடுகளே இந்திய விமானப்படைக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது. நமது தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் பழமையானவை. எந்தக் காலதாமதமும் இல்லாமல் பழைய தொழில்நுட்ப சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும் என ஏர் வைஸ்-மார்ஷல் சுனில் ஜெய்வந்த் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com