பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
பெலகாவி, விஜயாப்புரா, தார்வார், சிக்கமகளூரு, மடிக்கேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நிதி விடுவித்துள்ளது. ஆனால் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.
விசாரணை வேண்டும்
வெள்ளத்தால் பாதிக்கப் படாதவர்களுக்கும் சில அதிகாரிகள் நிவாரணம் வழங்குகிறார்கள். வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் தவறு நடந்துள்ளதை மந்திரிகள் பசவராஜ் பொம்மை, சோமண்ணா ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தகைய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
கவர்னர் உரையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது முழு பொய். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. வெள்ளத்தால் 8 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்களை சீரமைப்பதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீகண்டே கவுடா பேசினார்.