தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை

அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்தார்.
Published on

தேனி:

கோர்ட்டு உத்தரவு

ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தனியார் பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில இடங்களில் புகார்கள் எழுகின்றன. இதுதொடர்பான ஒரு வழக்கு தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி முகமது ஜியாவுதீன் அளித்த உத்தரவில், "தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இதை ஆய்வு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

சுற்றறிக்கை

இதையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தவறாமல் கட்டண விவரத்தை ஒட்டி வைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகனிடம் கேட்டபோது, "தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை கட்டாயம் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். அவ்வாறு ஒட்டி வைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டண விவரத்தை ஒட்டி வைக்காத பள்ளிகள் குறித்து பெற்றோர்கள், பொதுமக்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் புகார் செய்யலாம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com