குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை - கருணாஸ் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

குடிமராமத்து திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை - கருணாஸ் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
Published on

ராமநாதபுரம்,

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் வீரராகவராவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாடானை தொகுதியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கிராம மக்களின் பங்களிப்புடன் முறையாக நிறைவேற்ற முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தில் சிலர் பணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. அதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிமராமத்து திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் குறித்து மாவட்ட கலெக்டருடன் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் விவரங்களை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மடிக்கணினி எனது தொகுதியில் உள்ள 15 பள்ளிகளில் விரைவில் வழங்கப்படும்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நேரடியாக புகார்களை கூறியது நான்தான். என்னுடைய தொகுதியில் அவரின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் எனது தொகுதி பணிகளை செய்ய முடியவில்லை. அரசின் திட்டங்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று முதல்-அமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவித்தேன். அவரது நீக்கத்திற்கு நான் காரணம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com