சுந்தரக்கோட்டை,
காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணலில் அணை கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து நேற்று மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
காவிரி டெல்டா சமதள பகுதி என்பதால் உபரி நீரை அணைகட்டி தேக்க இயலாது. மலைக்குன்றுகளுக்கு இடையே தான் அணைகட்டி நீரை தேக்கி வைக்க முடியும்.
இதற்கான வாய்ப்புள்ள இடம் ஒகேனக்கல் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள ராசிமணல் ஆகும். இப்பகுதி மணல் பரப்புடன் இருபுறமும் மலை குன்றுகளுடன் காணப்படுகிறது.
ராசிமணலில் காவிரி கரையில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக எல்லையான மேகதாது உள்ளது. ராசிமணலில் தமிழக அரசு அணை கட்டினால் 100 டி.எம்.சி. தண்ணீரை தேக்க முடியும்.
இதனை கருத்தில் கொண்டு தான் 1961-ம் ஆண்டு காமராஜர், ராசிமணலில் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தமிழகம் உபரி நீரை தேக்க அணை கட்டவில்லை என்றும், உபரி நீரை கடலில் கலக்க செய்வதால் மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்துக்கு தண்ணீரை தருகிறோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராசிமணலில் அணை கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒகேனக்கலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
சம்பா சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் 1-க்கு 2 முறை நேரடி விதைப்பும், நாற்று விடும் பணிகளையும் செய்துள்ளனர்.
இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு கடன் சுமையில் சாகுபடி பணிகளை தொடர முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே புதுச்சேரி, தெலுங்கானா மாநில அரசுகளை பின்பற்றி ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.