கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய நடவடிக்கை; உலக சுகாதார நிறுவன குழு, சீனா செல்கிறது

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஜெனீவா,

உலகையே தன் ஆதிக்கத்தால் நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரசின் தோற்றம் பற்றி பெருத்த சர்ச்சை நிலவிவருகிறது.

சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. ஆனால் உகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கு இடையே, கொரோனா வைரஸ் உகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க டி.வி. பரபரப்பு செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கூறி வந்தனர்.

ஆனால் அமெரிக்க படை வீரர்கள்தான் இந்த வைரசை சீனாவில் கொண்டு வந்து விட்டதாக சீனா குற்றம் சுமத்துகிறது. இதை அமெரிக்கா நிராகரித்தது. இப்போது இந்த வைரசின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனம் தனது வல்லுனர் குழுவை அடுத்த வாரம் சீனாவுக்கு அனுப்புகிறது. இந்த வைரசின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி வருகிறது.

இந்த வைரஸ் எப்படி பரவத்தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டால்தான் அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும். அப்போதுதான் எதிர்காலத்துக்காக நாம் தயாராக முடியும்.

இந்த வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது நாம் தடுப்பூசிக்காகவோ, அதற்கான சிகிச்சைக்காகவோ காத்துக்கொண்டிருக்காமல், நாம் தொடர்பு தடம் அறிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை மூலம் அதன் பரவலை கட்டுப்படுத்தியாக வேண்டும்.

ஏற்கனவே 1 கோடி பேருக்கு மேலாக இந்த வைரஸ் தொற்று பாதித்து விட்டது, 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர். நாம் நமது கைகளில் வைத்துள்ள கருவிகள் மூலமாக இந்த நோய் பரவலை தடுக்க முடியும். இதற்கு கூடுதலாகத்தான் தடுப்பூசிகளும், சிகிச்சையும் இருக்க வேண்டும். அரசாங்கங்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதிலும், சமூகம் தனது பங்களிப்பை செய்வதிலும் தீவிரமாக இருந்தால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க பிறப்பித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி, பல நாடுகளும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விடத்தொடங்கி உள்ளன. இந்த நடவடிக்கைக்கு பின்னர் மீண்டும் தொற்று பரவல் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் இந்த வைரஸ் நகர்ந்து செல்வதற்கு நிறைய இடங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com