குதிரை பேரத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட்டனர்

குதிரை பேரத்தை தடுக்க அதிரடி நடவடிக்கையாக மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட்டனர். பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானாவில் முகாமிட்டுள்ளனர்.
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநில அரசியலில் தினந்தோறும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், அந்த கட்சிக்குள் கடந்த சில நாட்களாக குழப்பங்கள் நிலவி வந்தன.

இந்த நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இளம்தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகினார்.

அவருக்கு ஆதரவு அளித்து வரும் 22 எம்.எல்.ஏ.க்கள் (இவர்களில் 19 பேர் பெங்களூருவிலும், 3 பேர் டெல்லியிலும் முகாமிட்டுள்ளனர்.) தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என தகவல்கள் வெளியாகின. அவர்களில் 19 பேரது ராஜினாமா கடிதங்கள், சட்டசபை சபாநாயகர் பிரஜாபதியிடம், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களால் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் மீது சட்டவிதிகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் பிரஜாபதி அறிவித்தார்.

22 எம்.எல்.ஏ.க்கள் விலகலால், அங்குள்ள காங்கிரஸ் அரசு சிறுபான்மை அரசானது. அந்த அரசு கவிழும் ஆபத்தும் உருவாகி உள்ளது.

லக்னோவுக்கு ஹோலி பண்டிகையை கொண்டாட சென்றுள்ள மாநில கவர்னர் லால்ஜி தாண்டன், போபால் திரும்பியதும், இது தொடர்பான நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டெல்லியில் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நேற்று அந்த கட்சியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா என இரு கட்சிகளுமே தத்தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரைப்பேரத்தில் சிக்கி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கின்றன. முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பாரதீய ஜனதா தனது எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சி ஆளுகிற அரியானா மாநிலம், மனேசருக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் அதிரடியில் இறங்கியது. நேற்று மதியம் சுமார் 12 மணிக்கு அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் 92 பேரும், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும், 3 சொகுசு பஸ்கள் மூலமாக போபால் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் 95 எம்.எல்.ஏ.க்களும் சிறப்பு விமானம் மூலமாக காங்கிரஸ் கட்சி ஆளுகிற ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக போபால் விமான நிலையத்தில் முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமான மந்திரி சஜ்ஜன் சிங் வர்மா நிருபர்களிடம் பேசுகையில், நாங்கள் ஜெய்ப்பூருக்கு செல்கிறோம். அங்கு ஒன்றாக தங்கி இருப்போம் என்று கூறினார்.

மற்றொரு மந்திரியான கமலேஷ்வர் படேல், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். ஜெய்ப்பூர் சென்று, ஒன்றாக அமர்ந்து பல்வேறு பிரச்சினைகளையும் விவாதிப்போம். இப்படி நடப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது என்று கூறினார்.

இன்னொரு மந்திரியான பிரியாவ்ரத் சிங், எங்கள் வசம் 95 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். விலகிய எம்.எல்.ஏ.க்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அவர்களில் 10 முதல் 12 பேர் அரசை ஆதரிப்பார்கள். பெங்களூரு காங்கிரஸ் தலைவர்கள், அங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று கூறினார்.

இதற்கிடையே டெல்லியில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய்சிங் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், நாங்கள் அமைதியாக இருந்து விட முடியாது. நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் காங்கிரஸ். கட்சியை விட்டு விலக மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைப் பொறுத்தமட்டில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும். ஆனால் அளவு கடந்த லட்சியத்தை கொண்டுள்ள அவருக்கு மோடியும், அமித் ஷாவும்தான் மந்திரிசபையில் இடம் கொடுக்க முடியும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com