குடியுரிமை திருத்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை நடிகர் ராதாரவி பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தர்மபுரியில் நடிகர் ராதாரவி கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை நடிகர் ராதாரவி பேட்டி
Published on

தர்மபுரி,

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் நலச்சங்க தர்மபுரி மாவட்ட முதல் மாநாடு மற்றும் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சேலம் கலை பண்பாட்டுத்துறை மண்டல துணை இயக்குனர் ஹேமநாதன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, மாநில துணைத்தலைவர் டி.ஆர்.சின்னசாமி, நடிகர் சிங்காரவேலன், சங்க நிர்வாகிகள் முருகசாமி, சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி வேலன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இதில் தொழில் அதிபர்கள் பி.சி.ஆர்.மனோகரன், சுதாகிருஷ்ணன் மற்றும் சங்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி பேசினர். இந்த மாநாட்டில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற ஊர்வலம் தர்மபுரி நகரில் நடைபெற்றது.

மாநாட்டை தொடர்ந்து நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்க தேர்தல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதனை நிச்சயமாக இந்த கலைஞர்களுக்கு பெற்றுத் தருவேன். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கினார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக மீண்டும் வருவார். ரஜினிகாந்த் பா.ஜ.க.வுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு நடிகர் ராதாரவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com