கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் ; விவசாயிகள் கோரிக்கை

மொடக்குறிச்சி பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Published on

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, சிவகிரி, கணபதிபாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. அறுவடை பணி தொடங்கியபோது கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக சிவகிரி, மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, கணபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த அரசின் நெல் கொள்முதல் மூடப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நெல் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது, மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம் மற்றும் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் ஆகிய 2 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தெரியவருகிறது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கப்பட்ட கணபதிபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்ட நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் கொட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கணபதிபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தின் உள்ளே வைக்க இடம் இல்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் சிரமப்படுகின்றன.

இதன்காரணமாக விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே நெல் வீணாவதை தடுக்கும் பொருட்டு மொடக்குறிச்சி மற்றும் எழுமாத்தூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com