தண்டராம்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

தண்டராம்பட்டு அருகே வாகன சோதனையில் அ.தி.மு.க. நகர செயலாளர் மகன் மற்றும் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Published on

தண்டராம்பட்டு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்கள் குறித்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. தண்டராம்பட்டு அருகில் உள்ள விநாயகபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி லட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வந்த திருவண்ணாமலை அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் என்பவருடைய மகன் சதீஷ் (வயது 28) என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.78 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருவண்ணாமலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல் தண்டராம்பட்டு அருகில் உள்ள சின்னியம்பேட்டை சோதனைச்சாவடி அருகில் சோதனை செய்து கொண்டிருந்த பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில் வந்த தண்டராம்பட்டு மேட்டுபாளையம் கிராமம் ராஜகோபால் (53) என்ற வைக்கோல் வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

போளூர் அருகே எட்டிவாடி ரெயில்வே கேட் அருகே மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தவாசலை அடுத்த அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த பூசனம் (வயது 62) என்பவர் போளூரை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் பெற்ற கடன் தொகை ரூ.51 ஆயிரத்து 500-ஐ திருப்பி கொடுப்பதற்காக எடுத்து சென்றார். அதற்கான உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படையினர் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் செங்கம் கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்க ரூ.69 ஆயிரத்துடன் போளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப் போது பேட்டை கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் இருந்த துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் எதுவுமில்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்தனர்.

2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 500-ஐ பறக்கும் படையினர் போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com