அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் - ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மகளிர் தினம் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
Published on

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கோலாகலமாக நடந்தது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு மகளிர் அணியினர் பூச்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, கட்சியின் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கும், அவர்களின் சிலைகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மகளிர் அணி சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த கேக்கினை ஓ.பன்னீர்செல்வம் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

பின்னர் மகளிர் அணி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு கிரைண்டர், லேப்டாப், தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, இட்லி பாத்திரம், எவர்சில்வர் குடங்கள், தள்ளுவண்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை குழு கொறடாவுமான விஜிலா சத்யானந்த், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளரும், அமைச்சருமான சரோஜா ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நிலோபர்கபில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com