‘போலீஸ்’ என காரின் முன்பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டி மதுபாட்டில்கள் கடத்திய சினிமா தயாரிப்பாளர் உட்பட 2 பேர் கைது

பூந்தமல்லியில் ‘போலீஸ்’ என காரின் முன்பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டி மதுபாட்டில்கள் கடத்தி வந்த சினிமா தயாரிப்பாளர் உட்பட 2 பேரை வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 240 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

பூந்தமல்லி,

கொரோனா தொற்று காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட முழுஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் வரும் வாகனங்களை போலீசாரால் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரின் முன்பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கரை ஒட்டியதை கண்டு போலீசார் காரை நிறுத்தி விசாரித்தனர். அதில், காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதில் சந்தேகமடைந்த போலீசார், காரின் பின் பகுதியில் சோதனை செய்தபோது பெட்டிகளில் விலையுயர்ந்த மதுபான பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர்கள் என்பதும், அவருக்கு தெரியாமல் காரில் மதுபானம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான கலைச்செல்வம் (வயது 34), ஆனந்தராஜ் (28), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் மதுபானங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து 240 விலை உயர்ந்த மதுபானங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் என வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி சினிமா தயாரிப்பாளர் ஒருவர்

காரில் மதுபானங்கள் கடத்தி சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com