தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
Published on

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முறைப்படி நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை சரியான முறையில் வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் சிறப்பானதாக இருக்கும். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை ஒதுக்கி விட்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்தி, ஆளும் கட்சி பதவி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளதாக அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிவிக்கின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம். அவ்வாறு சின்னம் ஒதுக்க கோரி கோர்ட்டை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கோர்ட்டை நாடினால், அ.ம.மு.க.வும் கோர்ட்டை நாடும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் தேதி 27 மற்றும் 30 என்பது ஜோசியம் பார்த்து அதன்படி முடிவு செய்துள்ளார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பண பலத்தை வைத்து வெற்றி பெற்றது. மத்திய அரசுக்கு இப்போது தான், இவர்கள் யார் என்பது புரிந்துள்ளது. மத்தியில் ஆள்பவர்கள் இவர்களை கைவிட்டால் நிச்சயம் இந்த ஆட்சி நீடிக்காது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கானாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. இதை பலரும் சட்டரீதியாக மேற்கொண்டு, சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சொல்கிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவது மூலம் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்தது தவறு என்று இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்த மாதிரியான நடவடிக்கைகள் தேவையாக இருக்கிறது. இது போன்ற தண்டனைகள் கொடுப்பதன் மூலம், இனிவரும் காலங்களில் குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com