திருவாரூர் பழைய பஸ் நிலையத்திற்கு, அனைத்து பஸ்களையும் இயக்க வலியுறுத்தி வர்த்தகர்கள், பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் பழைய பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களையும் இயக்க வலியுறுத்தி வர்த்தகர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் பழைய பஸ் நிலையத்திற்கு, அனைத்து பஸ்களையும் இயக்க வலியுறுத்தி வர்த்தகர்கள், பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தும் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் மேற்கூரை மட்டும் சீரமைப்பு செய்யப்பட்டு எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்து வந்தது. பெயர் பலகை கூட இல்லாத பஸ் நிலையம் பொது வழிபாதையில் அமைந்து இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து விளமல் கல்பாலம் அருகில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருவாரூர் நகர பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பஸ் நிலையத்தை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து பழைய பஸ் நிலையத்திற்கு சென்று வந்த பஸ்கள் கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி பழைய பஸ் நிலையம் பகுதி வெறிச்சோடியது.

இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் பஸ்களை பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அதன்படி தேர்தல் நடப்பதற்கு முன்பு வரை பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அப்போது திருவாரூர் பழைய பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என கூறினார்.

பின்னர் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com