லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கிழக்கே பசடேனா நகரில் கிரேக்க ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று, தேவாலயத்தின் வெளியே பிணத்துடன் காரை நிறுத்தி விட்டு டிரைவர் வெளியே சென்றிருந்தார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை. கார் திருடப்பட்டிருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த நகர மேயர் டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் பதிவு வெளியிட்டார். அதில் அவர், காரை திருடிச்சென்றவர் அதில் இருந்த பிணத்தையாவது திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கிடையே அந்த காரை மறுநாள், அதன் டிரைவர் வேறு ஒரு சாலையில் பார்த்து போலீசில் புகார் செய்தார். போலீசார் மடக்கி பிடித்து திருடனை கைது செய்தனர். என்ன வேடிக்கை என்றால், காரில் வைக்கப்பட்டிருந்த பிணம் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அந்த பிணத்தை கைப்பற்றி உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.