மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் - நெய்வேலி பிரசார கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு

மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நெய்வேலியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் - நெய்வேலி பிரசார கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு
Published on

நெய்வேலி,

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி 8 ரோடு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.வி. எஸ்.ஸ்ரீரமேசை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க.விற்கும் எதிராக தமிழக மக்கள் மாற்றத்தை தர உள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் வருமானத்திற்கு உறுதியளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டனர்.

பதவி முக்கியமில்லை, நாடு தான், நாட்டு மக்களின் நல்வாழ்வு தான் முக்கியம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது நமது கொள்கையாகும். ஆனால் மோடி ஒற்றை ஆட்சியை இந்தியாவில் புகுத்த போராடி வருகிறார்.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் தேனி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தனக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறார். தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்வதில்லை.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீரமேஷ், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் கடுமையாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் தாமரைச்செல்வன், ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் ராமலிங்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட நிர்வாகி முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com