தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் அமித்ஷா பேச்சு

தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என புதுக்கோட்டையில் அமித்ஷா கூறினார்.
தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் அமித்ஷா பேச்சு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சங்கரப்பேரியில் நேற்று மதியம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் நேற்று மதியம் 2 அணி அளவில் தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுகூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

தமிழக மக்களை புறக்கணிக்கவில்லை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு கூட்டணி கட்சிகளின் ஆசி இருக்கிறது. எனவே அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் ஏழை, எளிய மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தியுள்ளார். அந்த ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். ஏழை மக்களுக்கான ஆட்சி மீண்டும் வர வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கட்சிக்கு இந்த அளவுக்கு பெரிய கூட்டணி அமையவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தமிழக மக்கள் எங்களை புறக்கணித்தாலும் தமிழக மக்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதனால் தான் தமிழகத்தில் 2 மந்திரியை கொடுத்தோம். ஒருவர் நிர்மலா சீதாராமன், மற்றொருவர் பொன் ராதாகிருஷ்ணன்.

ஊழல் வாதிகள்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தென் மாநிலங்களை புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அது தவறானது. தென் மாநிலங்களுக்கு 4 மேல்-சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். மோடி வலிமையான, உறுதிமிக்க தலைவர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சியின் பல்வேறு திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் ஊழல்வாதிகள். இவர்களின் மீது ஊழல் வழக்கு இருப்பு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. அவர்கள் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு பதிலடி

புலவாமா தாக்குதலின் போது 40 பேர் பலியானார்கள். அதில் 2 பேர் தமிழர்கள். அதை யாரும் மறந்து விடமுடியாது. இதற்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு பதிலடி கொடுத்தது. பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. ஆனால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டுமா, வேண்டாமா? என்று கூட்டத்தை பார்த்து அமித்ஷா கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் பழிவாங்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதற்கு அவர் நன்றி என்று கூறினார்.

பின்னர் அமித்ஷா தனது பேச்சை தொடர்ந்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறப்படும் என்று கூறி உள்ளது. அதை பா.ஜனதா ஏற்றுக்கொள்ளாது.

மீனவர்கள் நலன்

தமிழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது பட்டியலிட முடியும். கடந்த முறையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு ரூ.94 ஆயிரம் கோடி நிதி ஒதுங்கியது. ஆனால் பாரதீய ஜனதா அரசு ரூ.5.42 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மீனவர்களின் நலனை பாதுகாக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் பாரதீய ஜனதா தலைமையில் மத்திய அரசு அமைந்தால் தமிழக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். கூடுதலாக வளர்ச்சி திட்டங்களும் தொடங்கப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நமது கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் அமித்ஷாவுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளிவேல் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் அமித்ஷா புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். புதுக்கோட்டையில் பேசும்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com