தேஜஸ் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு திருச்சி-சென்னை இருக்கைகள் நிரம்பி விடுகின்றன

தேஜஸ் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி-சென்னை இருக்கைகள் நிரம்பி விடுகின்றன.
தேஜஸ் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு திருச்சி-சென்னை இருக்கைகள் நிரம்பி விடுகின்றன
Published on

திருச்சி,

மதுரை-சென்னை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.30 மணிக்கு சென்றடைகிறது. திருச்சிக்கு காலை 10.20 மணிக்கு வந்து காலை 10.23 மணிக்கு புறப்படுகிறது. இதேபோல மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது. திருச்சிக்கு மாலை 4.50 மணிக்கு வந்து மாலை 4.52 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரெயில் திருச்சி, கொடைரோடு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பயண நேரம் குறைவு என்பதாலும், சொகுசு இருக்கைகள், ஏ.சி. வசதி என்பதால் தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், அலுவலக பணி நிமித்தமாக பயணிக்க கூடியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ரெயிலில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.

தற்போது கோடை காலம் என்பதால் பகல் நேர பயணத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக குளு, குளு வசதியுடன் கூடிய இந்த ரெயிலில் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். திருச்சி-சென்னைக்கு சேர்கார் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.990 ஆகும். எக்ஸ்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் ரூ.1840 ஆகும். உணவு மற்றும் முன்பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து இந்த கட்டணமாகும். உணவு தேவையில்லை என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தெரிவித்துவிடலாம். அதற்கு தொகை சேர்க்கப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படும். தேஜஸ் ரெயிலில் சென்னை-திருச்சி இடையே இருக்கைகள் விரைவில் நிரம்பி விடுகின்றன. காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது கூறுகையில், தொடக்கத்தில் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கடந்த சில நாட்களாக ரெயிலில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றனர்.

பயணிகள் கூறுகையில், திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த ரெயில் பயனுள்ளதாக உள்ளது. இருக்கைகளில் பயணிகள் பார்வையிடும் வகையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் இந்தி மொழி படங்கள் தான் அதிகம் உள்ளன. உணவுக்கான கட்டணத்தை குறைத்து வசூலித்தால் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சென்னையில் இருந்து காலை புறப்படுவதற்கு பதிலாக மதுரையில் இருந்து அதிகாலை புறப்படும் படியும், மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு வரும்படியும் ரெயிலின் நேரத்தை மாற்றி அமைத்தால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மேலும் வரவேற்பு அதிகமாக இருக்கும். ஏழை, எளிய நடுத்தர பயணிகளும் பயணிக்கும் வகையில் கட்டணத்தை குறைத்தால் அனைத்து தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்த முடியும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com