

சென்னை,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் 1994-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பி.அமுதா நியமிக்கப்பட்டார். இவர் கடலூர் துணை கலெக்டராக பணியைத் தொடங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர், உணவு பாதுகாப்பு ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு பயிற்சி அளிக்கும் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமியின் பேராசிரியராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மத்திய அரசின் பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் நேற்று முன்தினம் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், பி.அமுதா, பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்காக 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும்வரை அவர் பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
பி.அமுதா மதுரையை சேர்ந்தவர். 1970-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி பிறந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சவுராஷ்டிரா ஆகிய மொழிகள் அவருக்கு தெரியும். நேர்மை மற்றும் நிர்வாக திறமையுள்ள அதிகாரியாக பல தரப்பினரின் அன்பைப் பெற்றவர்.
2015-ம் ஆண்டு பெருமழை வெள்ளம் காலகட்டத்தில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதிப்புகளை சீர் செய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வெள்ளம் தேங்குவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி திறம்பட பணியாற்றினார். காஞ்சீபுரம் மணிமங்கலம் என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகள், குழந்தைகளை நேரடியாக களத்தில் இறங்கி காப்பாற்றி மக்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இறுதி சடங்கு ஏற்பாடுகளை மிக துரிதமாக செய்ததோடு, அவருக்கு இறுதி மரியாதையும் செய்து அனைவரது மனதிலும் நல்லெண்ணத்தைப் பெற்றவர் பி.அமுதா. அவரது கணவர் ஷம்பு கல்லோலிக்கர், 1991-ம் ஆண்டு பிரிவு தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் தற்போது கைத்தறி துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதாவுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும், மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்., பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். என்று கூறியுள்ளார்.