புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பான விவாதத்தின்போது, ராஜஸ்தானை சேர்ந்த ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி எம்.பி. ஹனுமான் பெனிவால், சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் தேவையற்று இழுத்து சர்ச்சை ஏற்படுத்தினார்.
இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொந்தளித்துப்போய் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கனிம திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்தபோது, சபாநாயகர் மேஜை மீது இருந்த ஆவணங்களை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் ககோய் எடுத்து கிழித்து வீசினார்.
இந்த சம்பவத்தில் குர்ஜீத் சிங் ஆஜிலா, பேஹனான் பென்னி, கவுரவ் கோகாய், டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதான் ஆகிய 7 எம்.பி.க்கள் பட்ஜெட் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று மக்களவைக்கு கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
சபை கூடியதும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை சூழ்ந்து, டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர்.
இதனால் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் கூடியது.
சபையில் ஒரு பக்கம் அமளி நிலவினாலும் அதற்கு இடையே தாது திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் சபை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது, சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியபோதும், திவால் மசோதா (இரண்டாவது திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து கடந்த 2-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரையில் சபையில் நடந்த அமளிகள், சம்பவங்கள் தொடர்பான அனைத்தையும் விசாரிக்க சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்கப்படும் என்று சபையை நடத்திய கிரிட் சோலங்கி அறிவித்தார்.
சபையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் 11-ந் தேதி சபை மீண்டும் கூடும்.
மாநிலங்களவை நேற்று கூடியதும், சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, 8-ந் தேதி சர்வதேச பெண்கள் தினம் வருவதையொட்டி, சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பெண்கள் ஆற்றி வருகிற பணிகளை பாராட்டி புகழாரம் சூட்டினார்.
அடுத்த சில நிமிடங்களில் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கோலம் பூண்டனர். டெல்லி கலவர விவகாரத்தையொட்டி கோஷங்களை முழங்கி அமளியில் ஈடுபட்டனர். பலர் சபையின் மையப்பகுதியையும் முற்றுகையிட்டனர். இதனால், சபையை வெங்கையா நாயுடு நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
நேற்றும் மாநிலங்களவை எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கி விட்டது.
இரு சபைகளும் ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் 11-ந் தேதி கூடும். அப்போது டெல்லி கலவர விவகாரத்தில் விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.