கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1½ கோடி பறிமுதல் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 697 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
Published on

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், தேர்தல் செலவின பார்வையாளர்கள் பராக்.கே.சிங் மற்றும் மகாவீர், போலீஸ் பார்வையாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், செலவினங்கள் செய்வது குறித்தும், வாகனங்கள், பிரசாரம் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவது குறித்தும், தேர்தல் விதிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக்டர் சரயூ, விருத்தாச்சலம் சப்-கலெக்டர் பிரசாந்த், கலெக்டரின் நேர்மு உதவியாளர்(பொது) சந்தோஷினி சந்திரா, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் வேட்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற தேர்தல் கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு, 24 மணி நேரமும் மாவட்டத்தை கண்காணித்திட பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு மற்றும் ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகன சோதனையில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 697 மற்றும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 510 மதிப்பிலான மதுபாட்டில்கள், புடவை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பாக 41 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, இதில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டு 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஏற்கப்பட்ட 23 மனுக்களில் 2 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து 21 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

கடலூர் மாவட்டதில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக வாக்குச்சாவடியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 18004258530 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் வெப் கேமரா மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக நுண்ணிய பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com