சீனாவில் மேலும் ஒரு வைரஸ் பரவல் கண்டுபிடிப்பு; பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது

கொரோனா தாக்குதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் சீனாவில் மேலும் ஒரு வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது.
Published on

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் வெறியாட்டம் போடுகிறது. 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த வைரசிடம் சிக்கியுள்ள நிலையில், 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

இந்த வைரசுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த வைரசிடம் உயிரை விடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆட்கொல்லியிடம் இருந்து மக்களை பாதுகாக்க முடியாமல் அரசுகள் அனைத்தும் கையை பிசைந்து நிற்கின்றன.

இவ்வாறு கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சீனாவில் மேலும் ஒரு வைரஸ் பரவுவது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இது பன்றிகளில் இருந்து பரவுவதால் புதிய பன்றி காய்ச்சலாக அறியப்படுகிறது.

சீனாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018 வரை பன்றிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அவற்றில் ஜி4 மரபணு வகையை கொண்ட இன்புளூவன்சா வைரசின் திரிபுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த வைரஸ் 2016-ம் ஆண்டில் பன்றிகளில் அதிகமாக பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வைரசை மரநாய்களுக்கு செலுத்தியதில், அவற்றில் வலுவாக தொற்றி அவற்றுக்கு இருமல், தும்மல், மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதை ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும் அவற்றின் உடல் எடையும் 7.3 சதவீதத்தில் இருந்து 9.8 சதவீதம் வரை குறைந்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சீனாவில் பன்றி வளர்ப்பு துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 10.4 சதவீதம் பேருக்கு இந்த ஜி4 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் 18 முதல் 35 வயது வரையிலான தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இவ்வாறு அதிகப்படியான மனிதர்களிடம் வைரஸ் தொற்றி இருப்பதன் மூலம் அது மனித உடலிலேயே பெருகி, பரவல் நிலையை அடைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக பன்றிகளில் தோன்றிய இந்த வைரஸ் மனிதனை அடைந்து பரவுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் முறையே 46 வயது நபர், 9 வயது சிறுவன் ஆகியோரை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அண்டை வீட்டினரும், பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுமான இருவரும் ஜி4 வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதும் கண்டறியப்பட்டது.

கொரோனாவை போலவே இந்த வைரசும் சுவாச மண்டலத்தை தாக்குவதாகவும், எந்த வைரஸ் தடுப்பூசிகளும் இந்த வைரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் இந்த வைரஸ் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே பன்றிகளிலும், மனிதர்களிலும் இந்த ஜி4 வைரசுக்கு எதிரான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவின் ஆய்வு பத்திரிகையான பி.என்.ஏ.எஸ்.சில் கட்டுரையாக வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனாவிடம் இருந்தே மனித குலம் இன்னும் விடுபடாத நிலையில், மீண்டும் ஒரு வைரஸ் மிரட்டும் செய்தி மருத்துவ நிபுணர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com